“புள்ளத்தாச்சியா இருந்துட்டு ஏந்தாயி 6 மணிக்கு மேல வெளிய போற? காத்து கருப்பு அன்டீரபோகுது!!” என்று அளவில்லா பாசத்துடன் கூறும் முதியோர்களையும், “அது கெடக்கு பெருசு!’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, “இந்த கம்ப்யூட்டர் உலகத்துல இன்னுமா இந்த மூடநம்பிக்கை எல்லா நம்பிட்டு இருக்கீங்க?” என்று எதிர்கேள்வி எழுப்பும் மக்களையும் அதிகம் பார்த்திருப்போம். “அதுவும் சரிதானே? இப்பெல்லா காத்து கருப்புன்னு யாரு நம்பிட்டு இருக்கா?” என்று நம் மனதிலே கூட தோணலாம். இருப்பினும் ‘மூடநம்பிக்கை’ என்று கூறி அதனை ஒதுக்கிவிடாமல், அதன் அகத்தில் இருக்கும் பகுத்தறிவை சற்று சிந்தித்து பார்த்தல் தவறில்லை.

அக்காலத்தில் செப்பனிட்ட சாலைகள் இல்லை, சுவிட்சை தட்டியவுடன் எரியும் தெருவிளக்குகள் இல்லை. மனித குழந்தைகளுக்கு, பிறக்கும் போது மூட்டு எலும்புகள் கூட இருக்காது. அவ்வாறெனில், ஒரு கர்பிணிப்பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருக்கையில், ஒரு கர்பிணிப்பெண் மாலை நேரத்தில் வெளியே செல்லும் போது தவறுதலாக கீழே விழ நேர்ந்தால் ஓர் உயிர்க்கோ ஈருயிர்க்கோ ஆபத்து நேரிடலாம். இருப்பினும் கேட்பரா நம் மக்கள்? நமக்கு ‘கருத்து’ சொல்வது பிடிக்காது என்பதை நாமே அறிவோம். அதுவே, ‘காத்து’, ‘கருப்பு’, ‘பேய்’, ‘பிசாசு’ என்று அச்சுறுத்தும் வார்த்தைகளால் சொல்லவே, “ஆத்தாடி!! எதுக்கு வம்பு!” என்று அடங்கிவிடுவர். இவ்வாறு தோன்றியமையே நாம் இன்று கூறும் ‘மூடநம்பிக்கைகள்’. ஆகையால், இக்காலத்தில், நமக்கு ‘மூடநம்பிக்கை’ என்னும் போர்வை வேண்டுவதில்லை என்னும் அளவிற்கு நம் மக்களிடையே அறிவியல் ரீதியான, மற்றும் பகுத்தறிவு ரீதியான முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்பது நிதர்சமான உண்மை.

ஜோதிடம், வாஸ்த்து, சாஸ்திரம் ஆகிய நம் மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் பண்பாடோடும் கலாசாரத்தோடும் பிணைந்து, திருமணம், சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் இருந்து, ‘SMS JODHIDAM TO 54321’ என்று கைப்பேசிகளில் குறுந்தகவல்களாக வரும் அளவிற்கு ஒன்றிவிட்ட காரணத்தினால், அவற்றைப் பற்றி ஆராய்வதும் ஆராய முயற்சி செய்வதும் அவர்களின் மனதை புண்படுத்துவதாக அமையும் என்பதால் அவற்றை அவரவரின் சுய விருப்பங்களுக்கு விட்டுவிடுவது நன்மை தருவதாக அமையும்.

அவற்றை அன்றி, நம் தாத்தா பாட்டி நமக்கு நம்பிக்கைகளின் ரீதியாக ஊட்டிய அறிவியலையும் பகுத்தறிவையும் பேணிக்காப்பது நம் கடமை என்று கூறுவதை விட புத்திசாலித்தனம் என்று கூறுவது பொருந்தும்.

இன்று நாம் கல்லூரிகளில் HOME SCIENCE என்னும் ‘மனையியல்’ என்று ஒரு பாடப்பபிரிவை உண்டாக்கி குழந்தைகளை கவனித்தல், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் ஆகியவற்றை புத்தகத்தில் படிக்கிறோம். ஆனால், இவற்றை நம் முன்னோர் “நிலா சோறு” என்னும் ஒற்றை சொல்லில் செய்து காட்டினர். “அங்க பாரு தங்கம் நிலா!” என்று கூறி சோறு ஊட்டினால் குழந்தைகள் மேலே பார்க்க, தொண்டைக்குழியில் சோறு இறங்காத குழந்தை உண்டோ? ஆனால் இப்பொழுது நிலைமை மாறிற்றே! தொலைக்காட்சியில் ‘சோட்டா பீம்’ போடாமல் சோறு இறங்காத குழந்தைகள் தான் அதிகம் இன்று.

அது மட்டும் இன்றி, குழந்தைகளுக்கு கால்களில் கொலுசு அணிவித்து அழகு பார்ப்பது தமிழரின் பழக்கங்களில் மிக பழைமையான ஒன்று. அது அழகுக்கு மட்டும் என்று எண்ணி (சில சமயங்களில் கௌரவத்திற்கு கூட), தங்கம் அல்லது வெள்ளியில், மணிகளே அல்லாத கொலுசுகளை குழந்தைகளுக்கு அணிவிப்பது புது பழக்கம் ஆகி விட்டது. உண்மையில், கொலுசுகள் அணிக்கப்பட்டதன் காரணமே அதன் மணிகள் எழுப்பும் ஓசை தான்! வீட்டில் ஆண்மகன் வேலைக்கு சென்றபிறகு, பெண்டிர் வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் ஒருசேர கவனித்தாக வேண்டும். அப்போது, அவர்களது கவனம் குழந்தையின் மீது அல்லாமல் வீட்டு வேலைகளின் மீது சென்றுவிட வாய்ப்புண்டு. அதனால், கொலுசுகளின் மணிகள் எழுப்பும் ஓசைக்கொண்டு குழந்தை தாயின் கண்பார்வைக்குள் இல்லையெனினும் பாதுகாப்பாகவே இருக்க முடியும். இதனை எந்த மனையியல் பாடத்திலும் நம் முன்னோர்கள் படிக்கவில்லையே!

இதுமட்டும் தானா என்றால் இல்லை. நம் முன்னோர்கள் தம் வீடு, தம் பிள்ளை, தம் வேலை என்று வாழ்ந்துவிடவில்லை. அரிசி மாவில் கோலம் என்னும் பெயரில் எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு உணவும், முற்றத்தில் பானையில் தண்ணீர் வைத்தால் லட்சுமி கடாச்சம் கிடைக்கும் என்று சொல்லி பறவைகளுக்கு நீரும் வழங்கிய முற்ப்போக்கு சிந்தனைகளை சிந்தித்து பார்த்தால், அவர்களின் மேன்மை புரியும். “வடகத்த காக்கா தூக்கிட்டு போகாம பாத்துக்கோ” என்று கூறி பிள்ளையின் கையில் குச்சியை குடுத்துவிட்டு செல்கிறோமே நாம்!!

பொட்டு வைத்து புருவமத்தியில் சிறு அழுத்தம் குடுப்பதன் மூலம் ஆக்கினை சக்கரத்தை தூண்டி விட்டு அறிவாற்றலை பெருக்குதல், வீட்டின் மத்தியில் துளசி செடி வைத்து காலையில் அதனை சுற்றுவதன் மூலம் மூலிகை கலந்த தூய்மையான காற்றை சுவாசித்தல், வாரம் ஒரு நாள் விரதம் என்ற பெயரில் செரிமானத்தை சீர் படுத்துதல் என ‘நம்பிக்கைகள்’ என்ற பெயரில் எண்ணிலடங்கா அறிவியல் மற்றும் பகுத்தறிவைக் கொண்டிருந்த நம் பெரியோரை நாம் மூடநம்பிக்கை கொண்ட மனிதர்கள் என்று கூறி மறந்துவிட முடியாது. அவர்களின் பெருமையை நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் வேலை! அவர் சிந்தையை போற்றுவோம்!!

இப்பவும் கூட கழுத்து சுளுக்கிவிட்டது. பக்கத்து வீட்டு பாட்டி எண்ணெய் தேய்த்துவிட்டால் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் செல்கிறேன். நன்றி!

Prem Kumar Easwaran
Prem Kumar Easwaran is a Software Engineer by profession for the past 4 years and a writer by choice for about a decade. His main areas of writing interests are society, national growth, mental health, personal advises and self-improvization though he also writes on few other subjects such as Politics and History. He is active on Quora in the recent days and could be found at 'https://www.quora.com/profile/Prem-Kumar-1012'.

2 Comments

  1. Katturai arumai.In our eagerness to be seen as modern on the eyes of others, we fail to see that most of the traditional rituals are meant to be beneficial in one way or other.As it is necessary to weed out the ones lost significance on the march of time,all the other traditions have to be preserved,by bringing in to o focus its true significance.This insightful article, written in a lively style,is a fruitful attempt in that direction.Expecting more such articles from you Prem Kumar Easwaran.

    1. Such kind and encouraging words from a person of such a high profile is not something which happens everyday. It means a lot to me personally. Thank you, sir!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: